இலங்கையில் இருந்து உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல எதிர்பார்க்கின்ற 1,130 மாணவர்கள் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தமது பெயர்களை பதிவுசெய்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதன்படி, உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஜூலை 2 ஆம் திகதி தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக தமது நாடுகளுக்கு வருவதற்கு முன்னர் தடுப்பூசி கோரும் நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
அதேநேரம் பைசர் தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தற்போது பைசர் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
இதனிடையே, சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள 2,315 மாணவர்கள் தமது பெயர்களை பதிவுசெய்துள்ளனர். எனவே, மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் நபர்களுக்கும் சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, கடந்த 6 ஆம் திகதி 26 ஆயிரம் டோஸ் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
இந்த நிலையில், இம்மாதம் நிறைவடைவதற்குள் ஒருதொகை அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என உறுதியானதை தொடர்ந்து பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்றுமுதல் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் ஊடாக ஒரு மில்லியன் டோஸ் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமன்த ஹேரத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.