
கொழும்பு – கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை மற்றும் பலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 35 பேரில் நால்வர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்களான கடற்படையின் விசேட வைத்திய நிபுணர், மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர் மற்றும் இரத்தினக்கல் வர்த்தக தொழிலதிபர்கள் இருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் மற்றும் தலா 25,000 ரூபா ரொக்க பிணையிலும் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பு முடிந்ததைத் தொடர்ந்து அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், அடையாள அணிவகுப்பின் போது குறித்த சிறுமி நான்கு சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
அத்தோடு, துஷ்பிரயோத்திற்கு முன்னர் சந்தேக நபர்கள் யாரும் தனது வயதைக் கேட்கவில்லை என்று அடையாள அணிவகுப்பின் போது சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணை ஜூலை 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் மாலைதீவு முன்னாள் இராஜாங்க அமைச்சர், மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர், பிரபல வர்த்தகர் ஒருவர், மதகுரு ஒருவர், கப்பல் கெப்டன் மற்றும் கெப்டனின் உதவியாளர் ஒருவர் மற்றும் கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் உள்ளிட்ட 30 ற்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.