இலங்கையில் பரவிவரும் ‘டெல்டா’ வைரஸ் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடாது உண்மை நிலைமையை சுகாதார அமைச்சு மறைத்து வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘டெல்டா’ வைரஸ் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான முடிவுகளை இரகசியமாக மேற்கொள்ள முடியாது. அவ்வாறு சுகாதார அமைச்சு முடிவுகளை வெளியிடுவதற்கு தடைவிதித்திருந்தால் அதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும் என்று உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து வைரஸ் பரவல் குறித்த உண்மை தரவுகளை வெளியிட மறுத்தால் எதிர்காலத்தில் நாடு மிகவும் பயங்கரமான நிலையை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும், அதனை சுகாதார துறையினால் சமாளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாட்டுமக்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறி வருவதாகவும் இது ஒருபேரழிவு சூழ்நிலைக்கு வழிவகுக்கும். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.