January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ரிஷாத்தின் கைது நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப்போடாதீர்கள்”

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரிஷாத் பதியுதீன் மீது தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. அதையடுத்தே அவரைக் கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய ரிஷாத்தை கைதுசெய்யப் பொலிஸார் விரைந்தபோது அவர் ஓடி மறைந்துள்ளார். அவரைத் தேடும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ரிஷாத்தைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கின்றது.

ரிஷாத் விவகாரம் நீதித்துறை சம்பந்தப்பட்டது. இதில் எவரும் தலையிட முடியாது. ரிஷாத் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நாம் தீர்மானிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.