July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹைட்டி ஜனாதிபதி படுகொலையில் வெளிநாட்டு கூலிப்படைக்கு தொடர்பு!

ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸை கொலம்பிய இராணுவத்தின் ஓய்வுப் பெற்ற வீரர்கள் உள்ளிட்ட  28 பேர் அடங்கிய வெளிநாட்டு கூலிப்படையொன்றே படுகொலை செய்துள்ளதாக ஹைட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியாவைச் சேர்ந்த 26 பேரும்,  இரு அமெரிக்கர்களும் இந்தக் கொலையில் தொடர்புபட்டுள்ளனர் என ஹைட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  8 பேர்  தப்பியோடியுள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

முன்னர் இந்த கொலையில் சந்தேக நபர்கள் என கருதப்பட்ட 4 பேரை அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொன்றனர்.

ஆனாலும், ஜனாதிபதி கொலையில் தொடர்புடையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

ஹைட்டியின்  தலைநகர் ஒவ் ஸ்பெய்னில் ஜுலை 7 அதிகாலை ஆயுதக் குழுவொன்றினால் அந்நாட்டு ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் கொல்லப்பட்டார்.

அவர் மீது 12 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை படுகாயமடைந்த அவரது மனைவி புளோரிடாவிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சந்தேக நபர்களையும் ஆயுதங்களையும் அந்நாட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ள பொலிஸார் எங்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்கு வெளிநாட்டவர்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தப்பிச் சென்றுள்ளவர்களை கைது செய்வதற்காக புலனாய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில், கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் ஆறு பேர் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் எனத் தெரிவித்துள்ள கொலம்பிய அரசாங்கம் விசாரணைகளில் உதவுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜொவெனெல் மொய்ஸ் கொல்லப்பட்டத்தையடுத்து அந்த நாட்டில் தற்போது தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பிரதமர் கிளாட் ஜோசப் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஹைட்டியில் பொலிஸ் அதிகாரத்தை அந்ந நாட்டு இராணுவம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.