July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மேற்கொள்ளத் தயாராகும் சுகாதார அமைச்சு!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய வழிகாட்டல்களின் படி, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரை கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கவும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் அனுமதியை வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 5 ம் தேதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, திருமண வைபங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் மணமகன், மணமகள் உட்பட 10 பேருடன் பதிவு திருமணங்களை நடத்த  அனுமதி வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் மரண இறுதிச் சடங்குகளை 15 பேரின் பங்குபற்றலுடன் 24 மணி நேரத்திற்குள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், களியாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் ஆகியனவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.