உள்ளூர் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளதன் பின்னணியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 135 ரூபாயை தாண்டியுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்த போது, சீனி இறக்குமதி செய்யப்படுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் மாதாந்தம் சுமார் 30,000 முதல் 35,000 மெட்ரிக் டொன் வரை சீனி நுகர்வுக்காகத் தேவைப்படுகின்றது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற சீனி உற்பத்தி மிகக் குறைந்த அளவை மாத்திரம் தான் பூர்த்தி செய்கிறது.
அதன்படி நுகர்வுக்குத் தேவையான எஞ்சிய சீனியை இறக்குமதி செய்ய வேண்டும். எனினும், இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்படுகின்ற வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதத்தினால் குறைப்பது எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவின.
அப்போது இலங்கையில் சுமார் 90,000 மெட்ரிக் டொன் சீனி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஒரு கிலோ கிராம் சீனிக்கு சில்லறை விலை அறிவிக்கப்பட்டது, ஆனால் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதில் சீனி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் அதிக அளவு வரி வருவாயை இழந்ததாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.