July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்”: சரத் வீரசேகர

சுகாதார பணிப்பாளரின் உத்தரவை மீறி நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் சிவில் செயற்பாட்டாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று எழுந்த சர்ச்சையின் போதே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை சுகாதார ஒழுங்குவிதிகளை காட்டி கைது செய்தல் மற்றும் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைத்தல் என்பன மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகவே அமையும் என்று, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது இவர்களின் கருத்துக்களுக்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, கைது நடவடிக்கைகள் சுகாதார பணிப்பாளரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கடையவே இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

மக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படலாம் என்றும் அதனால் அவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று சுகாதார பணிப்பாளர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் அதன்போது தெரிவித்தார்.

இதனால் தொடர்ந்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்வோம் என்றும், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானிப்பர் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.