தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேரும் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது நீதிமன்றத்தினால் அவர்களை தலா 25 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன்படி பிணையில் விடுதலையாகி வந்தவர்களை அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் பஸ்களின் மூலம் முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமொன்றுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் சட்டவிரோதமாக சிவில் செயற்பாட்டாளர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியதாக எதிர்க்கட்சியினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.