File Photo
இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயாராக இருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகும் தீர்மானத்தை கட்சியின் தலைவரும், மத்திய செயற்குழுவினரும் ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் உடனடியாக விலகுவேன் என்று தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்தும் பதவியில் இருக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையெனவும், இதனால் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றால் இந்த அரசாங்கமும் இல்லை என்றும், சரியான நேரத்தில் நாங்கள் உதவியதனாலேயே இந்த ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் பதவிக்கு வர முடிந்தது என்றும் தெரிவித்துள்ள தயாசிறி ஜயசேகர, சிலர் இதனை மறந்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.