July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச நிதி முகாமைத்துவம் முழுமையாக பஸில் வசமானது

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

பஸில் ராஜபக்‌ஷ இன்று காலை நிதி அமைச்சராக பதவியேற்ற அதேவேளை, பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றார்.

இதன்படி இந்த அமைச்சுகளுக்குறிய விடயதானங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிதி அமைச்சின் விடய எல்லையாக பேரினப் பொருளாதாரக் கொள்கைகள், வருடாந்த வரவு செலவு மற்றும் ஒதுக்கீட்டு சட்டங்கள் தொடர்பான பொறுப்புகள், அரச நிதி முகாமை, உள்நாட்டு, வெளிநாட்டு சேமிப்புகள் மற்றும் முதலீடுகள், அரச கடன்கள், வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதி அலுவல்கள், சர்வதேச நிதி ஒத்துழைப்புகள், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை வழிநடத்தல் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை நிதி அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களாக பொதுத் திறைச்சேரி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் ஏற்றுமதி இறக்குமதி திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் மத்திய வங்கி, சகல அரச வங்கிககள், காப்புறுதி மற்றும் அதன் கீழான நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் அரசாங்கத்துடன் தொடர்புடைய 17 நிதியங்களும் நிதி அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மகிந்த ராஜபக்‌ஷ பொறுப்பேற்றுள்ள பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் விடய எல்லையாக ‘சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைக்கு அமைய பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்த்தை விரைவுப்படுத்துவதற்குறிய கொள்கை அபிவிருத்தி, திட்டங்களை தயாரித்த மற்றும் செயற்படுத்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அமைச்சின் கீழ் தேசிய திட்டமிடல் திணைக்களம், தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம், கொள்கை கற்கை நிறுவனம், நிலைபேறான அபிவிருத்தி மன்றம், கொம்பிரோலர் ஜெனரல் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வுச் சபை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட 10 நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் நிதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவி வகித்த நிலையில், அவரின் அமைச்சில் இருந்து நிதி அமைச்சு மாத்திரம் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு பஸில் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சை உருவாக்கி அதனை நிதி அமைச்சுக்கு பதிலாக மகிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.