இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ‘ZOOM’ தொடர்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை மாத்தறை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பிடபெத்த பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபர் வழங்கிய முறைப்பாட்டில் தமது பாடசாலையின் மாணவிகள் சிலர் இணையத்தளத்தின் ஊடாக பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ZOOM தொடர்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து சந்தேக நபர் குறித்த மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இணையம் ஊடாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதேபோல, சில மாணவிகளின் புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இலங்கையின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுவதுடன், தம்புத்தேகம பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், 28 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இன்றைய தினம் (08) மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.