November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.போதனா வைத்தியசாலையின் காணியை இராணுவத்தினருக்கு வழங்க கூடாது; கஜேந்திரன் எம்.பி தெரிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அந்த காணியை யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கையளிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வலியுறுத்தினார்.

யாழ்.நகரப்பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றரை ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையில் உரை நடைபிரிவு அமைக்க காணி இல்லாது இன்றுவரை கட்டிடம் கட்டப்படவில்லை.அதேபோன்று மகப்பேற்று விடுதியில்லை,சிறுவர் சிகிச்சை விடுதியில்லை,கண் சிகிச்சை விடுதியில்லை.இவ்வாறான நிலையில் அந்த ஒன்றரை ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதனை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் எதிர்க்கின்றோம்.

இந்த சபையில் சுகாதார அமைச்சருக்கு நாம் எத்தனையோ தடவை சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள்,குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக் காட்டியுள்ளோம்.அமைச்சருக்கு இவை பற்றி சிந்தனையில்லை.இராணுவ மயமாக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையை நாம் கண்டிக்கின்றோம்.

அந்தக் காணி யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கையளிக்கப்பட வேண்டும்.சிறுவர் வைத்தியசாலைக்காக புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியோடு,அவர்களிடமிருந்து பணம் திரட்டி இணுவிலில் வைத்தியசாலை கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்ற போது இந்த காணி இராணுவத்துக்கு கொடுப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.