கடந்த கால கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கிய மறைமுக அடக்குமுறை வரலாற்றை கொண்ட நபர் ஒருவரே பிரதான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நாட்டை இயக்குகின்றார்.இந்த ஆட்சிப் பயணமானது மக்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திர கல்வி முறைமையை மீறி இராணுவ பொறிமுறை ஒன்றினை உருவாக்கி கல்வியையும் இராணுவ மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்களுக்கு கொடுத்த சகல வாக்குறுதிகளும் மீறப்பட்டுள்ளன. ஆகவே தான் மக்களின் போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாது,மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாது அரசாங்கம் மாற்று வழிமுறைகளை கையாள முயற்சிக்கின்றது.
அடக்குமுறையை கையாண்ட இருண்ட வரலாற்றை கொண்ட தலைவர் ஒருவரே ஆட்சியில் உள்ளார்.இவரின் பணிப்பிற்கு அமையவே வெள்ளை வேன் கலாசாரம் உருவாக்கப்பட்டது.பலர் கொல்லப்பட்டனர், பலர் தாக்கப்பட்டனர், சிவராம், எக்னெலிகொட,லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டனர். அவ்வாறான மறைமுக அடக்குமுறை வரலாற்றை கொண்ட நபர் ஒருவரே பிரதான ஆசனத்தில் அமர்ந்துள்ளார். சகல ஜனநாயக செயற்பாடுகளையும் அடக்கு முறைக்குள் உட்படுத்தும் வேலையை அவர் செய்கின்றார். அதுவே நாட்டு மக்களுக்கு அச்சமும் சந்தேகமும் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.