July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் விதிகளில் தளர்வு!

கொவிட் -19 தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்கள் கடந்துள்ளமை மற்றும்  கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முழுமையாக கொவிட் தடுப்பூசியை பெற்று 14 நாட்களின் பின் வெளி நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தல் இன்றி சமூகத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கமைய இலங்கை வரும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைப் பெற்ற அசல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும்ஆங்கில மொழியில் பி.சி.ஆர் சோதனை அறிக்கையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால் இவ்வாறு நாட்டுக்குள் வருபவர்கள் 7 நாட்களின் பின்னர் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொவிட் தடுப்பூசி பெறாத அல்லது பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவிலான தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்கள் முடிவடையாத பயணிகள் 14 நாட்கள் நிறைவடையும் வரை கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டுக்கு வருவதற்கு முன்னர் (முதல் நாள்) பி.சி.ஆர் அறிக்கையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படாதவர்களுக்கும் இவ்வாறு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்தவர்களுக்கு புதிய விதிமுறைகள் பொருந்தாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.