January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க இடமளிக்கக் கூடாது: மாவை

“தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க நாங்களாகவே சந்தர்ப்பம் வழங்கிவிடக்கூடாது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிறிகாந்தா தலைமையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். ஆனால், சிறிகாந்தாவோடு உரையாடும்போது தனக்கு இது தொடர்பில் எதுவித எண்ணமும் இல்லை என கூறியிருந்தார். அதனால் நாம் அதைப் பற்றி பேசத் தேவையில்லை என நினைக்கிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்துக்கு வந்ததால்தான் அனந்தி சசிதரன் வெளியேறினார் என்று அவரது பேட்டி ஊடகங்களில் வெளிவந்தபோதே அறிந்துகொண்டேன். அதை நாம் முதலில் உறுதிசெய்ய வேண்டும். உறுதி செய்யாது ஏட்டிக்குப் போட்டியாக எதையும் கூற நான் விரும்பவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டமை குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் யாரும் எதுவும் கூறவில்லை. எனவே, அனந்தி சசிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறியமை தொடர்பில் அவரின் கட்சி பங்காளியாக இருக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினருடன் கலந்துரையாடவுள்ளோம். எமது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க நாங்களாகவே சந்தர்ப்பம் வழங்கக்கூடாது.

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கே நாங்கள் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். ஒன்றுபட்டு செயற்படுவதற்கு எமக்கு உள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவோம்.

இந்தக் கூட்டத்தில் பங்குபற்றாத தரப்பினரை இனிவரும் கூட்டங்களில் பங்குபற்ற வைப்பது தொடர்பாக குறித்த தரப்பினருடன் பேசவுள்ளோம்” என்று மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.