January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த 13 பேருக்கு பிணை

தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஜா-எல பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த குற்றச்சாட்டில் இன்று  (07) கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை முன்னாள் கவுன்சிலர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பமுனுகம பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த ஆறு பேரும் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இந்த போராட்டத்தை தடை விதித்து வெலிசறை நீதிமன்றம் நேற்று (06) உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது,

இருப்பினும், சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொம்பனி தெருவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டில் இன்று (07) காலை கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரான துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் ஜே.வி.பி மாகாண கவுன்சிலர் சமந்த வித்யாரத்ன, அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் 3 பேர் இன்று காலை போகஹகும்புர பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 1 ஆம் திகதி வெலிமடை, பொரலந்தை, போகஹகும்புர விவசாயிகளினால் நடத்தப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர்.

வெலிமடை நீதின்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா 100,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.