15 வயது சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் இருதய சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (07) முதல் அமுலாகும் வகையில் அவர் பணி நீக்கம் செய்யப்படுவதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவினால் குறித்த வைத்தியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா கூறினார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 34 பேர் கைதாகியுள்ளதுடன், பண்டாரகம பகுதியில் நேற்று (06) அதிகாலை கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டரான, இருதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெலிசறை கடற்படை மருத்துவமனை, ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, இரத்மலானை மற்றும் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கடமையாற்றும் 41 வயதான குறித்த வைத்தியர், கைது செய்யப்படும் போது வெலிசறை கடற்படை மருத்துவமனையில் கடமையாற்றும் வைத்தியராகவே பதவி வகித்து வந்தார்.
இதேவேளை, சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் செயல்பாடுகளுக்காக விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.