May 28, 2025 8:21:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க சீனா அனுமதி வழங்கியுள்ளது’: பிரதமர் மகிந்த

சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க சீனா அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இணையவழி மாநாட்டில் உரையாற்றும் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு நன்கொடை அளித்தமைக்காக சீனாவுக்கு பிரதமர் மகிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக செல்வந்தர்- ஏழை பாகுபாடின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிக்கோளுக்கு சீனா உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று நட்பு நாடான சீனா, இலங்கையின் உண்மையான நண்பர் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா அதன் அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்கவோ, ஏனைய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்று பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் பிரதமர் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு பூர்த்திக்கு இலங்கை மக்களின் வாழ்த்துக்களையும் பிரதமர் ராஜபக்‌ஷ பகிர்ந்துகொண்டுள்ளார்.