July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்னால்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவரது பெற்றோர் உட்பட 16 பேரை இன்று (07) பகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மறு அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்திருந்து.

இந்த அறிவிப்பை மீறி ஒன்று கூடலை நடத்த முயன்றதாக குற்றம் சாட்டியே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்காப்பாளர் ஒருவர்  நடத்திய துப்பாக்கி சூட்டில்  34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மெய்காப்பாளர்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீதி கோரி காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனயீர்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க பஸ் வண்டி ஒன்றில் வந்திருந்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார், புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர், எவ்வித ஆர்ப்பாட்டங்களையோ ஒன்று கூடலையோ செய்வதற்கு அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக எச்சரித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்திற்காக பஸ் வண்டியில் வந்தவர்கள் திரும்பி செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களை பின் தொடர்ந்து  பஸ்வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் நிலையத்துக்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.