File Photo
இலங்கையின் கதிர்காமம், நாகவீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்திருந்த நிலையில் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்ற போது இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
52 வயதுடைய சின்னத்தம்பி சிவபால சுப்ரமணியம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் யால காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.