October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும்; ரவூப் ஹக்கீம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 16 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதன் மூலம் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ள முடியுமானபோதும், மரண தண்டனை கைதி ஒருவருக்கும் மன்னிப்பு வழங்கி இருப்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சின் கீழ் இருக்கும் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட் சட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றுவதாக அரசாங்கம் தெரிவிப்பது சிறந்த வசனம், சிறந்த கனவாகும்.என்றாலும் இதனை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால்,எமது நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் கருத்திற் கொள்ளப்படவேண்டும்.

அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும்.இது 1978 தற்காலிகமாக கொண்டு வரப்பட்டதொன்றாகும்.என்றாலும் இதனை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு சந்தேக நபர்களுக்கு சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சித்திரவதை என்பது உடலியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவது மாத்திரமல்ல,அந்த நபரை நீண்டகாலம் தடுத்து வைத்து உளரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதும் ஒருவகையான சித்திரவதையாகும். அதனால் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும்.

அதேபோன்று, தான்தோன்றித்தனமாக கைது செய்து தடுத்துவைப்பதன் மூலமும் சித்திரவதைக்கு ஆளாகின்றது. கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் பாரியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிலர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் வைத்திய பீடம் மற்றும் இன்ஜினியர் பீடங்களுக்கு தெரிவாகிய மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் சாட்சியங்ளும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் ஒருவரை தீவிர கண்காணிப்பில் தடுப்புக் காவலில் வைப்பதாக இருந்தால் அது தொடர்பான காரணங்களை நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் பல்வேறு பெயர்களை பயன்படுத்தி தடுத்து வைத்திருக்கும் பலரைப் பற்றி கதைத்திருக்கின்றோம்.

குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருந்தும் இதுவரை அவருக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாமல் போயிருக்கின்றது ஐ.சீ.சீ.பீ.ஆர். சட்டத்துக்கு கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தீவிரவாதத்தை தூண்டும் வகுப்புகளை நடத்தியதாக தெரிவிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவது தொடர்பாக ஐராேப்பிய ஒன்றியமும் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் பொருளாதார தடைகளையும் ஏற்படுத்துகின்றனர்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதனுடன் இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, உங்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கும் மன்னிப்பு வழங்கியிருக்கின்றீர்கள். இந்த விடயங்களை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மன்னிப்பு அளிக்கப்பட்ட 16 பேரும் 10 வருடங்களுக்கும் அதிக காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள்.இதற்கு மேல் அவர்கள் தண்டனை அனுபவிக்க ஒன்றும் இல்லை.இவ்வாறான நகைப்புக்குரிய விடயங்களை பார்த்து சர்வதேசம் சிரிக்கின்றது.

அதேபோன்று குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவைக்கு மதிப்பு இருந்தன.அவை சுயாதீனமாக இயங்கி வந்தன. ஆனால் தேவையற்ற முறையில் அதில் அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அதன் சுயாதீனத்தன்மை இல்லாமல் போயிருக்கின்றது.

எனவே தடுத்து வைத்தல் சம்பந்தமாக வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு மற்றும் அது செயற்படும் விதம் தொடர்பில் மீண்டும் மீள் பரிசீலனை செய்யவேண்டும். இல்லாவிட்டால் அது தீவிர போக்கை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.