October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி; சுமந்திரன் எம்.பி.

உண்மைக்கு புறம்பான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்ட முயற்சிக்கும் நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெறாது எனவும்,ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கு எடுக்கும் கண்துடைப்பு நடவடிக்கைகளை முழு உலகமும் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணைக்குழு பற்றி பேசினீர்கள். தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பது மக்கள் கூற முன்னர்,உங்களின் அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவே இதனை கூறியது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர் என்பதை நீங்கள் அமைத்த ஆணைக்குழுவே கூறியது.

20 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள் என பரணகம ஆணைக்குழு கூறியது, உடலாகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு என்பனவும் கூறியுள்ளன.மஹிந்த ராஜபக்ஷ நியமித்த ஆணைக்குழுவே இதனைக் கூறியுள்ள நிலையில், இது குறித்து நீங்கள் கூற வருவது என்ன?பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த மூவாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என உங்களின் ஆணைக்குழுவே கூறியுள்ளது.

ஆணைக்குழுவே இதனை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அவர்களின் ஒருவரைக் கூட கண்டறிய முடியாது போயுள்ளது என்றால் நீங்கள் பேசுவதில் அர்த்தம் உள்ளதா? கொழும்பில் 11 இளைஞர்களை கடற் படையினர் கடத்தி கப்பம் பெற்ற சம்பவத்தில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது.இறுதியாக அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது. நீங்கள் தலையிட்டு வழக்குகளை மாற்றிவிட்டு இங்கு வந்து நியாயம் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது.எனவே இந்த சட்ட திருத்தங்கள் அனைத்துமே ஐரோப்பாவை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. இப்போதே காலம் கடந்துவிட்டது.உண்மையாக அரசாங்கம் நல்ல நோக்கத்தில் இவற்றை செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல முழு உலகமும் இதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.