July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பொய் பிரசாரங்களால் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல்’

Dayasiri Jayasekara Official Facebook

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதாகவும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் பொய் பிரசாரங்களை நிறுத்த அரசாங்கம் தலையிட்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.எமது கொள்கை, சீனாவுடன் நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக பல்வேறு நாடுகள் எம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.இது வெவ்வேறு நாடுகள் ஒன்றிணைந்து எமக்கு எதிராக செய்யும் வேலைத் திட்டமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு கூறும் விடயங்களை புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இந்த காரணிகளை கையில் எடுத்துக்கொண்டு அதில் அவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர்,பின்னர் எமக்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது குறித்து நாம் கவனம் செலுத்தாது உள்ளோம்.

இப்போது கனடாவில் இனப்படுகொலை வாரம் என அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது.இதனால் அடுத்த பரம்பரை தமிழ் மக்கள் இலங்கையில் அடக்குமுறை இடம்பெறுவதாக நினைப்பார்கள்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தும் விடயங்களில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும். தமிழ் அமைப்புகளின் இந்த செயற்பாடுகள் காரணமாக அங்கு வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையே உருவாகியுள்ளது.

இது கனடாவில் மட்டுமல்ல,தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இருக்கும் சகல இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் அங்கு வாழும் சிங்கள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகும்.எனவே இதனை நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..