
இணைய அடிப்படையிலான கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதலாம் வகுப்பு முதல் உயர் நிலை வரை பாடசாலை மாணவர்களுக்கான அனைத்து பாடங்களையும் 20 கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் ஒளிபரப்ப அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட “உட்புற நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் கல்வியைத் தக்க வைத்தல்” என்ற திட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பத்திரன இந்த தகவலை தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது நீண்ட விவாதங்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தரம் 1 முதல் 13 வரையான வகுப்புகளுக்கான நிகழ்ச்சிகளை 13 தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 7 தொலைக்காட்சி அலைவரிசைகளில் உயர்தர கல்வியுடன் தொடர்புடைய கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன.
இந்த தொலைக்காட்சி அலைவரிசைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது கல்வி அமைச்சில் நடைபெற்று வருகின்றன.பதிவுகள் முடிந்தவுடன், அனைத்து பாடங்களும் தொலைக்காட்சி சனல்கள் மூலம் ஒளிபரப்பப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் முழு கல்வித் துறையினுள் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் மனித வளங்களின் திறனை அதிகபட்சமாக பயன்படுத்தி கற்பித்தல் முறைகளில் பொதுவான தரங்களை பேணுவதற்கும், மாணவர்களின் பங்கேற்பினை கணக்கிடவும் கற்றல் செயல் திறனை மதிப்பீடு செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.