July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கடந்த கால அச்சுறுத்தல் நிலை மீண்டும் உருவாகின்றது” என்கிறார் தலதா அத்துகோரல

”வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை என்பது உண்மையே, ஆனால் இப்போது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அடித்து ,இழுத்து தூக்கிச் செல்லும் சம்பவங்களே இடம்பெறுகின்றது” என முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் உரையாற்றியமை தொடர்பில், பிரபாகரனை சுட்டுக்கொன்று இழுத்துவந்தது நினைவில் உள்ளதா ஜனாதிபதி கேட்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ள தலதா அதுகோரல, தற்போது அதேபோன்று மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரும் பிரபாகரனுக்கு நடந்ததுபோல் தான் நடக்குமென ஊடகவியலாளர் ஒருவரை பகிரங்கமாக மிரட்டியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் வெள்ளை வான் பற்றி பேசுகின்றனர். ஆனால் வெள்ளை வான் அச்சுறுத்தல் இல்லை என்பது உண்மையே ஆனால் வீடுபுகுந்து இழுத்துச் செல்வதையே இப்போது செய்கின்றனர் என்றும் தலதா அதுகோரல இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் கடந்த ஆட்சியில் கொலை மிரட்டல்களினால் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.