January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிவாரணம் கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்தியப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிவாரணம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தங்களை ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தோட்டத்திற்குள் தனிமைப்படுத்தி வைத்ததால் பாரிய அசௌகரியங்களுக்கும், பல்வேறு கஷ்டங்களுக்கும் ஆளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்திடமிருந்து நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், தற்போது தாம்  பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியே செல்லவும் முடியாத நிலைமைக்கு மத்தியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநீதியான முறையில் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் வெளியிடங்களுக்குச் சென்று அன்றாடம் கூலிவேலை செய்தவர்களுக்கும் வருமானம் இழப்பு என பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தங்களை தனிமைப்படுத்தலில் இருந்து விரைவில் விடுவிக்கும் படியும் சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

அதற்கமைய இன்று முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.