
(File photo)
கொழும்பில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 வது டோஸாக ‘பைசர்’ தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கை நாளை (07) முதல் மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க டெய்லி மிரர் செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
நேற்று (05) காலை தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ‘பைசர்’ தடுப்பூசியின் 26,000 டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்தடைந்தது.
இதில் 25,000 டோஸ் ‘பைசர்’ தடுப்பூசியை கொழும்பில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியை கொழுப்பு நகரத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகளை கொழும்பில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்று 2வது டோஸுக்காக காத்திருக்கும் 55 முதல் 69 வயதிற்குட்பட்ட கொழும்பு குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் படி, நாளை (ஜூலை 7 புதன்கிழமை) முதல், வெள்ளவத்தை, மாளிகாவத்தை மற்றும் நாரயன்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று தடுப்பூசி மையங்களில், ‘பைசர்’ தடுப்பூசியின் 2 வது டோஸ் குறித்த நபர்களுக்கு ஏற்றப்படும் என ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 70 வயதிற்கு மேற்பட்ட 88% வீதமானவர்களுக்கு ஏற்கனவே “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட் தடுப்பூசிகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகவும் கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க குறிப்பிட்டார்.