July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டு மட்டத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

‘வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தை 2021 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் அச்சுறுத்தலுக்குத் தீர்வாக சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டிகளைப் பின்பற்றி கல்வித் துறையிலுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் மனித வளத்தை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி, இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் “ஈ தக்சலாவ”, ‘குருகுலம்” தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் ‘யூடியுப்’ அலைவரிசை மற்றும் மாகாண மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் இணையவழியிலான பாடங்கள் போன்ற மாற்று வழிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தரத்திற்கும் எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளுடன் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், ஆசிரியர்கள் வாராந்தம் பிள்ளைகளின் தேர்ச்சியை மதிப்பீடு செய்து மாணவர் தேர்ச்சி அறிக்கையைப் பேணல், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் பெற்றார், மாணவர்களையும் இணைத்துக் கொண்டு வீட்டுமட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர் செயலாற்றுகை ஒழுங்குபடுத்தல்களை மேற்கொற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், வலய மட்டத்திலும் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

This slideshow requires JavaScript.