கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸ், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில், குறித்த சந்தேக நபர் பாணந்துறை, பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்திய நிபுணர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் பணியாற்றிவரும் ஒருவரெனவும், அவர் லெப்டினன்ட் கமாண்டர் தர கடற்படை அதிகாரியொருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த வைத்திய நிபுணர், தலா 15 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி, இரு சந்தர்ப்பங்களில் 15 வயதான சிறுமியை அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே, கைது செய்யப்பட்ட வைத்திய நிபுணரும் மற்றொரு நபரும் இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 7 ஆம் திகதி முதல் கல்கிஸை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்று வரை கைது செய்யப்பட்ட 32 சந்தேக நபர்களில் சிறுமியின் தாயும் உள்ளடங்குவார்.
அதுமாத்திரமின்றி வைத்தியர், முச்சக்கர வண்டி சாரதி, கார் சாரதி, துறவியொருவர், மாணிக்க கல் தொழிலதிபர், மிஹிந்தலை பிரதேச சபையின் உப தலைவர், கப்பலின் கப்டன், மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர், இணையத்தள உரிமையாளர்கள் இருவர், ஹோட்டல் முகாமையாளர் மற்றும் விளம்பரத்தை வடிவமைத்தவர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.