இலங்கையின் கொவிட் தொற்று நிலவரம் தொடர்பான எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெல்டா தொற்றுப் பரவல் குறித்து சுகாதார தரப்பினர் எச்சரிக்கைகளை விடுத்துவரும் நிலையில், அரசாங்கம் ஏதேனும் காரணத்திற்காக அது தொடர்பான தகவல்களை மறைக்கின்றதா? என்று இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, கொவிட் தொடர்பான எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் சமூக ஊடகங்கள் பலமாக இருக்கும் நிலையில் எந்தத் தகவலையும் மறைக்கக் கூடிய நிலைமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் டெல்டா தொற்று அச்சுறுத்தல் உள்ள காரணத்தினாலேயே சுகாதார துறையினர் அது தொடர்பான எச்சரிக்கையை விடுத்து வருவதாகவும், இதனால் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.