இலங்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த வாரங்களாக சுகாதார தொழிற்சங்கங்கள் அடிக்கடி அடையாள பணி பகிஷ்கரிப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அந்த போராட்டத்தை தொடர் பணிப் பகிஷ்கரிப்பாக விரிவுப்படுத்தியுள்ளன.
நேற்று காலை முதல் அவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், நேற்று மாலை அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையில் தமது கோரிக்கைளுக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் தமது போராட்டத்தை நிறுத்தாது தொடர்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்களின் பகிஷ்கரிப்புகளால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சைகளே வழங்கப்படுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். சில வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.