November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை; மாலைதீவு பிரஜை உட்பட 32 பேர் கைது!

கொழும்பு – கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜை மாலைதீவின் முன்னாள் நிதியமைச்சர் என அந்நாட்டு ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சிறுமியை இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்து அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த மாலைதீவு பிரஜையும் சம்பவத்துடன் தொடர்புடைய ஹோட்டல் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தவிர கைதானவர்களிடையே, சிறுமியின் தாயும், விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தள உரிமையாளர் மற்றும் அதன் நிதி நிர்வாகியும், மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரும், மிஹிந்தலை பிரதேச சபை பிரதி தலைவரும், பிக்கு ஒருவரும், தொழிலதிபர்கள் சிலரும் மற்றும் கப்பல் கெப்டன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தாயார் மற்றும் இணையத்தள உரிமையாளரினால் இன்று (05)பிணை கோரப்பட்ட நிலையில், பிணை வழங்குவது சமூகத்தில் குழப்பத்தை தோற்றுவிக்கும் என தெரிவித்து நீதிபதி பிணை கோரிக்கையை மறுத்ததோடு விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்டவர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்தோடு, பாடசாலைகள் மூடப்பட்டதால் மாணவர்கள் இணையத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் இவ்வாறான ஆபாச இணையத் தளங்களை அணுகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

பாடசாலை ஆரம்பிக்கும் வரையாவது இவ்வாறான இணையத் தளங்களை மாணவர்களால் அணுக முடியாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்தோடு, சி.ஐ.டி மற்றும் பொலிஸார் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்துடன் இணைந்து சிறுவர் ஆபாசத்தை  தடுக்கும் திட்டத்தை வகுக்குமாறு அறிவுறுத்தினார்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், அவரை இணையத்தில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் ஜூன் 07 ஆம் திகதி முதல் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 32 பேரில் 22 பேர் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுமி தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்ட மேலும் 3 இணையத்தளங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மேலும் 12 பேர் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.