மிருசுவில் கொலைக் குற்றவாளி சுனில் ரத்நாயகவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து நீதியரசர் முர்து பெர்னாண்டோ விலகிக்கொண்டுள்ளார்.
குறித்த மனுக்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழாத்தில் இருந்தே, நீதியரசர் முர்து பெர்னாண்டோ விலகிக்கொண்டுள்ளார்.
சுனில் ரத்நாயகவின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தில் அங்கம் வகித்த காரணத்தினால் தான் விலகிக்கொள்வதாக நீதியரசர் முர்து அறிவித்துள்ளார்.
சுனில் ரத்நாயகவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் செப்டம்பர் மாதம் 21 ஆம் நடைபெறவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்நாயக 2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.