July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி அக்கராயனில் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த தடைவிதித்த பொலிஸார்

கிளிநொச்சி அக்கராயனை ஆண்ட குறுநில மன்னனாக கருதப்படும் அக்கிராசனின் சிலைக்கு பிரதேச அரசியல்வாதிகளும், பிரதேசவாசிகளும் வணக்கம் செலுத்தும் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

13 ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி அந்தப் பகுதியில் சிலையொன்று வைக்கப்பட்டது.

அதன்படி சிலை திறக்கப்பட்ட நாளில் அதற்கு வணக்கம் செலும் வகையில் இன்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் அந்த நிகழ்விற்கு சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும் இன்றைய நாள் கரும்புலிகளின் நினைவு நாள் என்பதால் நினைவு வணக்கம் எதனையும் செலுத்த முடியாது என்று கூறி அந்த நிகழ்வை நடத்த எதிர்ப்பு வெளியிட்டனர்.

இவ்வேளையில் எதிர்ப்பையும் மீறி அங்கிருந்தவர்கள் நிகழ்வை நடத்த முயன்ற போது அவர்கள் வைத்திருந்த மாலையை பாதுகாப்புத் தரப்பினர் பறித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் அங்கு பதற்றமான சூழலொன்று ஏற்பட்டிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார் என்றும், இவரது பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் காலப்போக்கில் அக்கராயன் என மாறியதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.