
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்துள்ள கொவிட் சூழல் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் என்பனவே காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.
இன்று (05) இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான சிறப்பு ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
“2015 முதல் 2019 வரை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 ஆக இருந்தது. எனினும் அது பின்னர் 2.3 வரை குறைவடைந்தது.
ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் 3,089 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையில் முன்னெடுத்தனர்.
2020 ஆம் ஆண்டில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதன் விளைவாக நாங்கள் 66 நாட்களை இழந்தோம்.
அந்த நேரத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16.7 ஆகக் குறைந்தது இது மிகப்பெரிய பிரச்சினையாகும் என்றார்.
அத்தோடு, நாட்டில் தற்போது இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு மேலதிகமாக வேறு பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
ஆடம்பர பொருட்களின் இறக்குமதி இடை நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் அதனை முன்னெடுக்கவில்லை.
எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு வேறு மூலோபாயங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.