July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் கழிவுகளை சேதன உரமாக வழங்க முயற்சி’: நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் கழிவுகளை சேதன பசளை எனக் கூறி, விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பில் நுவரெலியாவில் எதிர்க்கட்சியினரும் விவசாயிகளும் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயிகளை இல்லாமல் செய்து, நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே இந்த அரசாங்கத்தின் திட்டம் என்றும் இதனை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள கவிதாஸ் திடல் வரை சென்று, எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகர வர்த்தகர்களும், தமது வியாபார நிலையங்களை ஒரு மணித்தியாலத்திற்கு மூடி ஆதரவு வழங்கியுள்ளனர்.

தமக்கு தட்டுப்பாடு இன்றி இரசாயன உரத்தை பெற்றுக் கொடுக்குமாறு பதாதைகளை ஏந்தி, விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகள் முழுமையான வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அரசாங்கம் தம்மைக் கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

தாம் சேதன பசளைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அரசாங்கம் அதனை நடைமுறைபடுத்திய விதம் பிழையானது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.