July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வைத்திய அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இராணுவ தளபதி

Shavendra-Silva-

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அதனை முழுமையாக நிராகரிப்பதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை இராணுவம் இடையூறு விளைவிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் இராணுவத்தினர் அனுமதிக்க முடியாத தலையீடுகளை மேற்கொள்வதோடு, மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்துக்குள் அனுமதியின்றி நுழைதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள இராணுவ தளபதி, ஆடை தொழிற்சாலை துறையில் உள்ளவர்கள் சிலருக்கு தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அவர்களின் முன்னைய சுகாதார நிலைமைகளே காரணமாகும் என கூறியுள்ளார்.

இதில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுவதைப் போல் தடுப்பூசிகளை ஏற்றும் இராணுவத்தினர் மீதான தவறுகள் எவையும் இல்லை.

அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை சாதகமாக முன்னெடுப்பதற்கும் உயிர் கொல்லி வைரஸ் பரவலை இல்லாதொழிக்கும் நோக்கத்திலும் மாத்திரமே இராணுவம் இதில் பங்களிப்பு வழங்கி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

வேறு விதமான தலையீடுகள், அனாவசியமான இடையூறுகள் மற்றும் வேறு குறுகிய நோக்கங்களை மையப்படுத்தி மேற்படி செயற்பாடுகளில் தலையீடு செய்யவில்லை.

எவ்வாறாயினும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் இராணுவம் வழங்கி வரும் பங்களிப்புகளை எவ்வித பின்வாங்கலும் இன்றி தொடர்ச்சியாக வழங்கும் என இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.

எதிர்காலத்திலும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவம் செயற்படுவதுடன், எந்த நேரத்திலும் அண்மைய பகுதிகளிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து கொவிட் – 19 தடுப்புக்கான பணிகளை பின்வாங்கல் இன்றி முன்னெடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.