கொவிட் -19 வைரஸ் பரவலில் நாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலையொன்றில் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது கொவிட் -19 தொற்றாளர் எண்ணிக்கை குறைவாக பதிவாவதை போன்று தரவுகள் வெளிப்பட்டாலும், நாட்டில் அச்சுறுத்தல் நிலைமையை இன்னமும் நாம் கடக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டெல்டா வைரஸ் பரவலின் பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று நாட்டில் காணப்படுவதை மறுக்க முடியாது எனவும், சமூக பரவலாக இது மாறியுள்ளதா? என்பதை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஆய்வுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொவிட் -19 வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்டா வைரஸ் பரவல் குறித்த அதிக தரவுகள் எமக்கு கிடைத்துள்ளது. நாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஒன்றில் உள்ளது என்பதையே எம்மால் மீண்டும் தெரிவிக்க முடியும்.
நாட்டை முடக்குவதா அல்லது நாட்டை திறப்பதா என்பது குறித்து அரசாங்கம், கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், சுகாதார தரப்பாக எம்மால் கூற முடிந்தது ஒன்றுதான், மக்கள் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தற்போதுள்ள பரவலை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறையாகும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மேல் மாகாணம் அச்சுறுத்தல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மேல் மாகாணத்தில் இருந்து மக்கள் வைரஸை வேறு பகுதிகளுக்கு காவிச் செல்லாத விதத்தில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.