இலங்கையில் இதுவரை 40 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் மொத்தமாக 42 இலட்சத்து 22 ஆயிரத்து 194 பேருக்கு இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதில், 29இலட்சத்து 71 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸூம் 12 இலட்சத்து 50 ஆயிரத்து 443 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, 1,931,714 பேருக்கு “சினோபார்ம்” தடுப்பூசியின் முதலாவது டோஸூம் 851,969 பேருக்கு அதன் இரண்டாவது டோஸூம் ஏற்றப்பட்டுள்ளது.
இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் சீன பிரஜைகளுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
“ஸ்புட்னிக்” வி தடுப்பூசியின் முதலாவது டோஸ் 114,795 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. 14,427 பேர் குறித்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவளை, “அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசியின் முதலாவது டோஸ் 925,242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், 384,047 பேருக்கு அதன் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளன.
கொவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இவர்களுக்கு மாற்று தடுப்பூசியாக 2 வது டோஸாக “பைசர்” அல்லது “மொடர்னா” கொவிட் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் அவற்றை ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.