எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்தர்ப்பம் வழங்கினால் நாட்டிற்காக முன்நிற்க தயாராக இருப்பதாக கூறிய அவர், இம்ரான் கான் போல் தனக்கு மாற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மாதுலுவாவே சோபித தேரர் தன்னை பரிந்துரைத்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
சிலருக்கு அர்ஜுன ரணதுங்க மீது மிகுந்த பயம் இருக்கிறது. இது ஒரு பயம் மட்டுமல்ல. இது ஒரு அரசியல் பயம். ஏனென்றால் நான் இம்ரான் கான் ஆகிவிடுவேன் என்று சிலர் அஞ்சுகிறார்கள். இந்த நாட்டிற்கு ஒரு இம்ரான் கான் தேவைப்பட்டால் அது கூட நடக்கலாம். இந்த நாட்டு மக்களுக்கு அவ்வாறு இம்ரான் கான் ஒருவர் தேவைப்பட்டால் என்ன தவறு உள்ளது.
விளையாட்டை போல அரசியலிலும் நான் சரியானதை தான் செய்தேன். நான் யாரையும் திருடுவதற்கு அனுமதிக்கவில்லை.எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக செய்து முடித்தேன் என அவர் தெரிவித்தார்.
எனவே, எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நாட்டை மீளக் கட்யெழுப்புவதற்கு முன் வருவேன். இவ்வளவு காலமாக நான் என் கழுத்தை கொடுக்க முன்வரவில்லை. இதனால், இந்த விளையாட்டிலிருந்து வெளியே வந்து என் கழுத்தை கொடுப்பதற்கு தயாராக உள்ளேன். இந்த நாட்டில் பல தலைவர்கள் இருப்பதாக தற்போது வரை நான் நினைத்தேன்.
ஆனால் இப்போது இந்த நாட்டை நேசிக்கும் தலைவர்கள் யாரும் இல்லை என்பதை நான் காண்கிறேன். நாட்டை நேசித்து நாட்டைக் கட்டியெழுப்ப வரும் தலைவர்கள் யாரும் இல்லை என அவர் தெரிவித்தார்.