இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நேற்றைய மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
எனினும், ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் 5 புள்ளிகளைப் பெற்று 11 ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றுக்கொண்டது
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தசுன் ஷhனக்க ஆட்டமிழப்பின்றி 48 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டொம் கரன் 35 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எனினும், வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணி தயாராக இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி தொடர் நாயகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதனிடையே, மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்ட காரணத்தால் இரு அணிகளுக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரின் கீழ் போட்டி ஒன்றுக்கு வழங்கப்படும் 10 புள்ளிகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன்படி, ஐசிசி ஒருநாள் சுப்பர் லீக் தரவரிசையில் கடைசி இடத்தில் இருந்த இலங்கை அணி, 12 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் முன்னேற்றம் கண்டு 11ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியைத் தொடர்ந்து ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முன்னதாக நடைபெற்ற டி-20 தொடரை 3-0 என இழந்த இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரையும் இழந்து எந்தவொரு வெற்றிகளையும் பெறாமல் நாடு திரும்பவிருப்பதோடு, நாடு திரும்பிய பின்னர் அடுத்ததாக இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.