November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா?: ஆராயும் பங்காளிக் கட்சிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நேரடி தலையீடுகள் காரணமாக ஆளுந்தரப்புக்குள் அதிருப்தி நிலையில் இருக்கும் பங்காளிக்கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பங்காளிக் கட்சிகளை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் நேரடியாக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாகவும், அவர் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போதும் அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் சக்தியாக பஸில் ராஜபக்‌ஷவே உள்ளதாகவும், அரசாங்கத்தில் பிரதான கட்சியினால் தாம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.

பஸில், பி.பி.ஜெயசுந்தர இருவரது தனித் தீர்மானத்தில் தான் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தை உருவாக்கியதன் உண்மையான நோக்கம் நிறைவேறாது அர்த்தமற்ற அரசாங்கமாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோல் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெளியேற்றவும், ஏனைய கூட்டணிக் கட்சிகளை வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தனித் தீர்மானத்தில் பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளான அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் சந்திம வீரக்கொடி எம்.பி ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்தும், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா அல்லது தனித்து இயங்குவதா என்பது குறித்தும் பேசப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார்.