அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் ஆளும் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் உருவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஆளுந் தரப்பு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் நாளுக்கு நாள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன.
இந் நிலையில், தற்போது அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மீது ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன், ஆளும் கட்சி கூட்டத்திலும் கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டே முரண்பாடான கருத்துகளை முன்வைப்பது, அரசாங்க விரோத தீர்மானங்களை முன்னெடுப்பதன் மூலமாக மக்கள் மத்தியில் தவறான எண்ணப்பாட்டை உருவாக்கவும் இவர்கள் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ விடயத்தில் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு தவறானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாளை திங்கட்கிழமை (05) பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணையை நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்துவது குறித்து எதிர்க்கட்சியினர் கலந்துரையாடவுள்ளனர்.
அதேபோல், ஆளும் கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டம் நாளை பிற்பகல் பிரதமர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆளும் கட்சியின் பஷில் தரப்பாக செயற்படும் நபர்கள் ஆதரவு வழங்குவதா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருப்பதா என்பது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் இந்த வாரம் கூடும் பாராளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அடுத்த வார அமர்வுகளின் போது பிரேரணையை கொண்டுவர வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.