அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கை, இந்தியாவை போன்று மிக மோசமான நிலைக்கு செல்லும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
1ம் கொவிட் அலை இலங்கைக்கு பெரியளவில் தாக்கத்தை செலுத்தவில்லை, 2ம், 3ம் அலைகளை நாமாக உருவாக்கிக் கொண்டோம்.புத்தாண்டு, நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதன் விளைவே இப்போது அனுபவிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவலில் மிகவும் மோசமான வைரஸாக கருதப்படும் டெல்டா வைரஸ் பரவலே இலங்கையிலும் பரவுகின்றது.
ஆனால் அவ்வாறான அச்சுறுத்தல் நிலையொன்று இல்லாததைப் போலவே மக்கள் செயற்படுகின்றனர்.
கொவிட் செயலணியும் இதனை பெரிய விடயமாக கருதவில்லை என்றே எமக்கு தோன்றுகின்றது.இப்போது தொற்றாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றால் அது இன்று நேற்று எடுக்கப்பட்ட தரவுகள் அல்ல.
நாடு முடக்கப்பட்டிருந்த வேளையில் எடுக்கப்பட்ட தரவுகளே இப்போது வெளிவருகின்றது. நாடு பயணத்தடையில் இருந்து விடுபட்ட வேளையிலேயே டெல்டா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று வரை வெவ்வேறு பகுதிகளில் டெல்டா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்படுகின்றனர். எனவே தொற்றுப்பரவல் நிலையொன்று உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நிலை தொடர்ந்தால் டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது கையை மீறி போகும். அவ்வாறன நிலையொன்று கண்முன்னே தெரிகின்றது.
மரணங்கள் அதிகரிப்பதுடன், நாட்டின் சகல துறைகளிலும் தாக்கத்தை செலுத்தும் நிலையொன்று உருவாகப் போகின்றது.
இப்போது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் நாட்டை முடக்க முடியாது. ஆகவே கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் எனவும் உபுல் ரோஹன அறிவுறுத்தினார்.