இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை ஜுலை 19 ஆம் திகதி வரையில் நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே 21 ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு ஜுன் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை தொடர்ந்தும் நீடிப்பதற்கு கொவிட் தடுப்புச் செயலணி தீர்மானித்தது.
இதன்படி நாளை வரையில் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கத் தீர்மானித்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணி இன்று மாலை அறிவித்துள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் தற்போது அமுலில் உள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுடனான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரவு நேரகளியாட்ட விடுதிகள், நீச்சல் தடாகங்கள், கண்காட்சி நிலையங்கள், பூங்காக்கள், ஆலயங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
அத்துடன் களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், மக்களை ஒன்றுகூட்டும் கூட்டங்களை ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மசாஜ் நிலையங்கள், வர்த்தக நிலையங்களை சுகாதார ஒழுங்குவிதிகளுடன் நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது. பதிவுத் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் மணமகள், மணமகள் வீட்டார் தரப்பில் 10 பேருக்கு மாத்திரமே அதன்போது கலந்துகொள்ள முடியும்.
இதேவேளை மரணச் சடங்குகளை நடத்தும் போது 15 பேருக்கு மட்டுமே அதில் கலந்துகொள்ள முடியும் என்று அறிவிக்ககப்பட்டுள்ளது.