
பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வருவதன் மூலம் இந்த நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாது எனவும், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுகளை உருவாக்கியது பஸில் ராஜபக்ஷ தான் என இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பஸில் ராஜபக்ஷ அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் மறைந்து விடாது. தற்போது நாடு மிகப் பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது. இதை நாங்கள் மக்களிடம் சொல்ல வேண்டும். நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எனவே, நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என நாங்கள் மக்களிடம் கேட்க வேண்டும். ஏனெனில் நாங்கள் அனைவரும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கவில்லை எனவும், இந்த நகைப்பிற்குரிய அமைச்சு பதவிகளை பஸில் ராஜபக்ஷம், பீ.பி.ஜயசுந்தரவுமே உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அத்துடன், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் பஸில் ராஜபக்ஷவினால் தான் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதில் பஸில் ராஜபக்ஷவும், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவும் இணைந்து தான் செம்பு, மிளகாய்த் தூள், பதிக் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகளையும் உருவாக்கினார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து வேலை செய்ய நாம் தயார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த தயாசிறி ஜயசேகர தற்போதைய அரசாங்கத்தில் பத்திக் ஆடைகளுக்கான இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.