February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 4 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு!

இந்த ஆண்டின் கடந்த ஆறு மாத  காலப்பகுதியில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 4000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 8,165 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஆறு மாதங்களில்அதிகார சபைக்கு 48,000 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும், இந்த காலப்பகுதியில் 4,000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென்று பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் தரம் 6 முதல் 13 வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு ‘குழந்தை மற்றும் சட்டம்’ என்ற தலைப்பில்  3 மேலதிக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் 75 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.