January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 வயது சிறுமி விற்பனை: இணையத்தள உரிமையாளர் கைது!

கொழும்பு – கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தள உரிமையாளர் மற்றும் அதன் நிதி நிர்வாகியாக செயற்பட்டு வந்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  தெரிவித்துள்ளார்.

இதன்படி சிறுமி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரையில் இரு பெண்கள் உள்ளிட்ட 28 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான  விசாரணைகள் கல்கிசை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் சிறுவர் மற்றும் பெண்கள் விசாரணை பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதற்கமையவே குறித்த 28 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மிஹிந்தலை பிரதேச சபை பிரதி தலைவரும், பிக்கு ஒருவரும், தொழிலதிபர்கள் சிலரும் மற்றும் கப்பல் கெப்டன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்காக இணையதளத்தில் விளம்பரப்படுத்திய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இணையதளத்தின் உரிமையாளர் பாணந்துறை – நல்லூருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபராவார்.

அத்துடன், குறித்த இணைதளத்தின் நிதி நிர்வாகியாக செயற்படும் பிலியந்தல, மாவித்தர- அலுபோலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவின் தொலைத் தொடர்பாடல் பிரிவினரால் குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவும், குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இவர்களுடன் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவின் தொலை தொடர்பாடல் பிரிவு, சைபர் குற்ற விசாரணைப் பிரிவு என்பனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.