தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் ஒரு சில முஸ்லிம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அடாத்தாக அரச காணியில் மண் நிரப்பப்பட்ட இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை ஆக்கிரமிக்க முற்பட்ட முஸ்லிம் நபரை தடுத்து நிறுத்திய கிராம சேவையாளரை தாக்க முற்பட்ட குறித்த நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கலையரசன் எம்.பி,
‘கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை 1 சி கிராம சேவகர் பிரிவில் உள்ள அரச காணியொன்றில் மண் இட்டு நிரப்பும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த நடவடிக்கை இங்குள்ள முஸ்லிம் தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட விடயம். இதனை கிராம சேவகர் தடுத்து, தமது கடமையை முன்னெடுத்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தை நாங்கள் பார்வையிட்ட போது அரச காணியொன்றை விளம்பரப்பலகை அகற்றப்பட்டு மண் நிரப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.மீளவும் இவ்விடயம் இங்கு நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லிம் நபர்களால் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுவதும்,இங்குள்ள மக்களை சுதந்திரமாக வாழ முடியாத சூழலை உருவாக்குவதுமான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.இவ்வாறான செயற்பாடுகள் இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுவது ஒரு வன்முறையை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கின்றது.
தமிழ் மக்களின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல் இழுத்தடித்து அந்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச காணியை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கையை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படக் கூடாது என்று எண்ணுகின்ற அரசியல்வாதியும், அவருடன் சேர்ந்த நபர்களுமே செய்கின்றார்கள்.
கடந்த மாதம் பெரிய நீலாவணையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்று அது தடுத்து நிறுத்தப்பட்டது.தற்போது இங்கு இடம்பெற்றுள்ளது.இவ்வாறு தொடர்ச்சியாக இது இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
இங்கு வாழ்கின்ற சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டுமானால் ஒரு சமத்துவமான, நடுநிலையான, நியாயமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து இவ்வாறான ஆக்கிரமிப்புகள் இடம்பெறும் போது அது சமூகங்களுக்கிடையில் பாதிப்பினை ஏற்படுத்தும். இங்கிருக்கின்ற இரண்டு சமூகங்களையும் இணைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய சுதந்திரமான, நீதியான நிருவாக நடைமுறையை கையாள்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இந்த நாட்டின் தலைவர்களுடைய தலையாய கடமையாக இருக்கின்றது.
எனவே இவ்வாறான ஆக்கிரமிப்பு பணிகள் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும்.சமூகங்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.அரச காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இங்கு பொதுவான சில மக்களுக்கு தேவையான கட்டிடங்கள் அமைக்கப்படுகின்ற போது அரச காணிகள் இல்லையென கூறப்படுகின்றது.எனவே இவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.